ரத்த வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை என்று சிவாஜி செய்த விஷயம்.. நடிப்புக்காக இப்படியும் ஒரு அர்ப்பணிப்பா?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

ஒரே படத்தில் சிவாஜி கணேசன் முன்னணி நடிகராகவும், திறமையான நடிகராகவும் அறியப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தமிழ் சினிமாவின் கொடுமுடியாக வலம் வந்தார். எம் ஜி ஆர் –சிவாஜி என்ற இருமைதான் தமிழ் சினிமாவில் கோலோச்சியது.

   

சிவாஜி கணேசன் நடிப்பில் கிங்காக இருந்தது மட்டுமில்லாமல் அவரின் நேரம் தவறாமையும் அவரின் சிறப்பம்சங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. ஏழு மணிக்கு ஷூட்டிங் என்றால் ஏழு மணிக்கு மேக்கப்போடு நடிக்க தயாராகிவிடுவார் சிவாஜி கணேசன். அவரால் ஒரே ஒரு நாள் கூட ஷூட்டிங் தாமதம் ஆனதோ அல்லது நிறுத்தப்பட்டதோ இல்லை என்பது சினிமா உலகினர் அறிந்ததே.

அப்படி ஒரு சம்பவம்தான் 1972 ஆம் ஆண்டு நடந்துள்ளது. 1972 ஆம் ஆண்டு பல படங்களில் நடித்த சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரமும் செய்துள்ளார். ஓய்வில்லாமல் அவர் இப்படி உழைத்ததால் அவர் உடல்நலம் கெட்டுள்ளது. ரத்த அழுத்தம் அதிகமாகி அவர் ஒரு கட்டத்தில் ரத்த வாந்தியே எடுத்துவிட்டாராம். அவரை பரிசோதித்த மருத்துவர்ககள் ஓய்வெடுக்க வேண்டும் என சொல்லிவிட்டார்களாம்.

ஆனால் அடுத்த நாள் நீதி என்ற படத்தின் ஷூட்டிங் இருந்ததால் அதை தவிர்க்க முடியாத சிவாஜி ஷூட்டிங்குக்கு சென்றுவிட்டாராம். மேலும் அன்று படமாக்கப்பட்ட காட்சியின் போது ஒரு சிவப்பு துண்டை போட்டுக்கொண்டாராம். ஏனென்றால் மீண்டும் ரத்த வாந்தி வந்துவிட்டால் அதை மற்றவர்கள் அறியாமல் அந்த சிவப்பு துண்டால் துடைத்துக் கொள்ளலாம் என்பதனால்தானாம். இப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள ஒரு நடிகரை காண்பது எவ்வளவு அரிதான ஒன்று.