அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ‘முக்கிய நபர்’ வழியாக ரகசியப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க விதிக்கப்பட்ட 48 மணிநேரக் கெடுவை 5 நாட்களுக்கு நீட்டித்துள்ள டிரம்ப், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அந்த ரகசிய நபர் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகெர் காலிபாப் என மேற்கத்திய ஊடகங்கள் கருதினாலும், ஈரான் அரசு இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும் முதலீட்டாளர்களைக் கவரவும் டிரம்ப் ஆடும் பொய் நாடகம் இது என ஈரான் சாடியுள்ளது.
ஈரானிய அரசியலில் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட காலிபாப், அந்நாட்டின் உச்ச தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அமெரிக்கா இவரை ஒரு முக்கியப் புள்ளியாகப் பார்க்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் முக்கியப் பங்காற்றி வருவதாகவும், விரைவில் பாகிஸ்தானில் இதற்கான சந்திப்பு நிகழலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன. உலக எரிசக்தி விநியோகத்தில் 30 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஹார்முஸ் கடல் பகுதியை ஈரான் மூடினால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால், இந்த 5 நாள் அவகாசத்திற்குள் சுமுக முடிவு எட்டப்படுமா அல்லது போர் வெடிக்குமா என்ற பதற்றம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.
