அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விராலிமலை விஜயபாஸ்கர் மற்றும் கரூர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் அண்மையில் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் வகித்த தொகுதிகள் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தொகுதிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்திலேயே இந்த நடவடிக்கை என அவர்கள் கூறியுள்ள நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அவர்களின் இந்த முடிவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்.பி. உதயகுமார், “பதவி ஆசையோ, பதவி வெறியோ இல்லாததால் தான் நீதிமன்றத்தை அணுகியதாகக் கூறுவது வேடிக்கையானது. தொண்டர்களின் இரத்தத்தையும் வியர்வையையும் மூலதனமாகக் கொண்டு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உழைப்பில் வெற்றி பெற்றவர்கள் இவர்கள். மக்கள் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் தான் ராஜினாமா செய்தோம் என்று சட்டமன்றத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ தைரியமாக விளக்கம் அளிக்க இவர்கள் முன்வருவார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், சாதாரணத் தொண்டர்களாக இருந்த இவர்களுக்குக் கட்சியும் எடப்பாடியாரும் அமைச்சர் பதவிகளை வழங்கியது மக்களுக்குச் சேவை செய்யத்தானே தவிர, கல்லூரிகளையும் மாடமாளிகைகளையும் கட்டி குபேரர்களாக வாழ்வதற்கு அல்ல என்றும் அவர் காட்டமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து த.வெ.க-வில் இணைந்தது குறித்து விமர்சித்த அவர், “அதிமுக அளித்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் அனுபவித்துவிட்டு, கட்சிக்குச் சோதனை காலம் வரும்போது காட்டிப் கொடுத்துவிட்டு ஓடிய எட்டப்பர்கள் இவர்கள். உடனடியாக எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராகி விஜய் சாருக்கு முக்காடு போடத் தயாராகிவிட்டீர்கள். ஆனால், அதிமுக தொண்டர்களைப் போல த.வெ.க தொண்டர்கள் ஏமாளிகள் அல்ல; அவர்கள் உங்களை விட நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள், ஏமாற்றத் தெரிந்தவர்கள். உங்கள் ஜிகினா வேலைகள் விஜய்யிடம் செல்லுபடியாகாது. தங்கத்தையும் வைரத்தையும் உருக்கி கிரீடமாகச் சூட்டினாலும், உங்களைப் போன்ற துரோகிகளை தவெக-வினர் ஒருபோதும் நம்பமாட்டார்கள்” என்றார்.
இறுதியாக, வித்தை காட்டுவதில் விஜயபாஸ்கரை விட நடிகர் விஜய்யே சிறந்தவர் என்று குறிப்பிட்ட உதயகுமார், “இவ்வளவு அதிகாரத்தையும் பொருளாதாரத்தையும் கொடுத்த தாய் கழகமான அதிமுகவையே தூக்கி எறிந்த விஜயபாஸ்கர், நாளை த.வெ.க தலைவர் விஜய்யையும் தூக்கி எறிய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை அந்த கட்சியினர் யோசிக்க வேண்டும். வழக்கு போட உங்களுக்கு வெட்கமோ மானமோ இல்லையா? தேர்தல் ஆணையம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தித் தனது உரையை நிறைவு செய்தார்.
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…