பிரபல தென்னிந்திய நடிகை பார்வதி திருவோத்து, தனது சிறுவயதில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அண்மையில் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழில் ‘பூ’, ‘மரியான்’, ‘தங்கலான்’ போன்ற திரைப்படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர், சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் எப்போதும் முன்னணியில் இருப்பவர். ஒரு நேர்காணலில் பேசிய அவர், தனது சிறுவயதில் ரயில் நிலையத்தில் தந்தை மற்றும் தாயுடன் இருக்கும் திடீரென ஒருவர் வந்து என் மார்பில் அடித்துவிட்டு ஓடிவிட்டார். அது வெறும் தொடுதல் அல்ல. கடுமையான வலியை ஏற்படுத்தியது. அன்று என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை. மிகவும் பயந்துவிட்டேன் என பார்வதி கூறியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொண்ட பார்வதி, சாலையில் நடக்கும்போது ஆண்களின் கைகளைக் கவனித்து நடக்க வேண்டும் என்று தனது தாய் தற்காப்புக்காகக் கற்றுக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். ஒரு தாய் தன் மகளுக்கு இத்தகைய எச்சரிக்கைகளைக் கற்றுக் கொடுக்கும் சூழல் நிலவுவது வேதனையளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், தனது 17 வயதில் தனக்கு நன்கு தெரிந்த ஒரு நபரால் ஏமாற்றப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டதையும் அவர் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். அன்பு என்ற பெயரில் நடக்கும் இத்தகைய அத்துமீறல்களைப் புரிந்துகொள்ள தனக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பார்வதியின் இந்தத் துணிச்சலான வெளிப்பாடு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் உச்சத்திலிருக்கும் ஒரு நடிகை, தனது கடந்த கால வலிகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது, இதே போன்ற பாதிப்புகளைச் சந்தித்த பல பெண்களுக்கு ஒரு தைரியத்தையும் விழிப்புணர்வையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
