தமிழக அரசியலில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் திரைமறைவில் கைகோர்த்துச் செயல்படுவதாகப் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தவெக தரப்பைச் சேர்ந்த அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தவெக ஆட்சியை வீழ்த்துவதற்காகத் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், இந்த இரு கட்சிகளின் கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக அனிதா ராதாகிருஷ்ணனும் (திமுக), கே.டி.ராஜேந்திர பாலாஜியும் (அதிமுக) செயல்படுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க இரு கட்சிகளும் குதிரை பேர முயற்சிகளில் இறங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், சிபிஐ விசாரணை கோரி திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள கடிதம் வெறும் ‘டைம் பாஸ்’ நடவடிக்கை மட்டுமே என்றும் எள்ளி நகையாடியுள்ளார்.
அதிமுகவினர் தங்களது அரசியல் திசை தெரியாமல் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் நிர்மல் குமார், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுகவினர் மேற்கொண்ட முயற்சிகளை விரும்பாமல்தான் அக்கட்சியின் தொண்டர்கள் பலர் தற்போது தவெகவில் இணைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழக அரசின் கொள்கை விளக்கங்களையும் மின்சாரத் துறை சார்ந்த திட்டங்களையும் பகிர்ந்துகொண்டார். உப்பூர் அனல்மின் நிலையத் திட்டம் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும், சென்னையில் ஏற்படும் மின்தடைகள் மாநகராட்சிப் பணிகளின்போது கேபிள்கள் அறுபடுவதால் மட்டுமே ஏற்படுகின்றன தவிர, மின்பற்றாக்குறையால் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் என்றும், மின்வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதில்டி கொடுத்துள்ளார். அதிமுக என்பது 53 ஆண்டுகால நெடிய வரலாற்றைக் கொண்ட, பல துரோகங்களைக் கடந்து வந்துள்ள ஒரு வலுவான பேரியக்கம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், விஜய் ஒரு நடிகர் என்ற ஒரே காரணத்திற்காகவே தவெகவிற்கு ஓரளவுக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன என்றார். தவெகவிற்குத் தமிழகத்தில் மிகப்பெரிய அலை வீசியிருந்தால் அவர்கள் முழுமையான மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே உண்மையான, பலமான மக்கள் கட்டமைப்பு உள்ளது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும், தற்போதைய தவெக ஆட்சியை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “எந்த நிமிடம் மு.க.ஸ்டாலினுக்குக் கோபம் வருகிறதோ, அந்த நிமிடமே தவெக அரசு முடிவுக்கு வந்துவிடும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதற்கு வலுசேர்க்கும் விதமாக திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன், இன்னும் ஆறு மாதங்களில் மீண்டும் மு.க.ஸ்டாலினே தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் இணைந்து போட்டியிடும் என்று தவெக தலைவர் விஜய் முன்பு குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் மாறி மாறி வெளியிட்டு வரும் இந்த அரசியல் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…