எங்கள் தலைவர் செத்துப் போவதா..? கொந்தளித்த ரசிகர்கள்… இயக்குனரின் முடிவால் படுதோல்வி ஆன எம்.ஜி.ஆர் படம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

அதே போல எம் ஜி ஆர் தன்னுடைய படங்களுக்கு என்று சில முன்முடிவுகளை வைத்திருந்தார். மாசு மருவற்ற நல்லவர் வேடங்களில் மட்டுமே நடிப்பது, சிகரெட் மற்றும் மது பழக்கங்கள் அற்றவராக இருப்பது என சில பாலிசிகளை எம் ஜி ஆர் வைத்திருந்தார். அவற்றை அவர் மீறும் போது அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறாமல் தோல்வியடைந்துள்ளன.

   

அந்த வகையில் எம் ஜி ஆர் படங்களுக்கு என்று உருவான ஒரு செண்ட்டிமெண்ட்தான் படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் இறக்கக் கூடாது என்பது. அதை ஒரே ஒரு முறை இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் உருவான பாசம் படத்தில் மீறியுள்ளார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

பாசம் படத்தின் கதையை சொல்லும்போதே இயக்குனர் ராமண்ணா, இத்திரைப்படத்தின் இறுதியில் உங்கள் கதாப்பாத்திரம் இறந்துவிடும் எனக் கூறியுள்ளார். அதைக் கேட்ட எம்.ஜி.ஆர், “இத்திரைப்படத்தின் கதை நன்றாக இருக்கிறது. ஆனால் கிளைமேக்ஸில் எனது கதாப்பாத்திரம் இறப்பது போன்று இருக்கிறது. இதனை எனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். படம் நிச்சயமாக தோல்வியை தழுவும்” என கூறியுள்ளார். ஆனால் அவரை பல காரணங்களை சொல்லி சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார் ராமண்ணா.

படம் வெளியான பின்னர் எதிர்பார்த்தது போலவே தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல ரசிகர்கள், எம்.ஜி.ஆர் இறப்பது போல் திரைப்படம் எடுத்ததற்கு கண்டனங்கள் தெரிவித்து கடிதங்கள் எழுதி அனுப்பியுள்ளார்கள். இந்த தோல்வியால் அதன் பின்னர் எம் ஜி ஆர் இதுபோன்ற ரிஸ்க்குகளை தன்னுடைய படத்தில் எடுப்பதை நிறுத்திவிட்டாராம்.

author avatar