உலகப்புகழ் பெற்ற செட்டிநாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காரைக்குடி, மண்ணின் பெருமையைப் பறைசாற்றும் உன்னதமான கட்டடக்கலைக்கு என்றும் பெயர் பெற்றதாகும். பர்மா தேக்கு மரத்தூண்கள், இத்தாலி பளிங்குக்கற்கள், பெல்ஜியம் கண்ணாடிகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து மெருகூட்டப்பட்ட ஆத்தங்குடி தரை ஓடுகள் (Tiles) போன்ற உயர்தரப் பொருட்களைக் கொண்டு இந்த வீடுகள் கலைநயத்துடன் கட்டப்படுகின்றன. “திண்ணை” முதல் “முற்றம்” வரை காற்றோட்டமும் வெளிச்சமும் தாராளமாக உள்ளே வரும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட இந்த வீடுகள், தமிழர்களின் கூட்டுக்குடும்ப வாழ்க்கையையும், விருந்தோம்பல் பண்பையும் உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. கோடைகாலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் இதமாகவும் இருக்கும்படி கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள், காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு கட்டிடக்கலை அதிசயமாய் விளங்குகின்றன.
இந்த பிரம்மாண்ட பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பி.எம்.ஏ. வீதியில் அமைந்துள்ள “சிதம்பர விலாஸ்” என்ற வீடு இப்போது சோஷியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 1924-ம் ஆண்டு அண்ணாமலை என்பவரால், அன்றைய காலகட்டத்தில் வெறும் 33,000 ரூபாய் செலவில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில், பிரமிக்க வைக்கும் அரிய வேலைப்பாடுகளுடன் பார்ப்பதற்கு அப்படியே ஒரு சொகுசு அரண்மனை போல இந்த வீடு தோற்றமளிக்கிறது. தலைமுறைகள் கடந்தும் தங்களது பாரம்பரிய அடையாளத்தை மாறாமல் பாதுகாத்து வரும் இந்த வீட்டை, இப்போது அண்ணாமலையின் ஐந்தாவது தலைமுறையினர் மிகவும் பெருமையோடு பராமரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் நூற்றாண்டு விழா காண்பதையொட்டி, சமீபத்தில் சில முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மட்டுமே சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவானதாக அந்த குடும்பத்தினர் இணையதளம் வழியாகத் தெரிவித்துள்ளனர். அன்றைய காலத்தில் 33 ஆயிரம் ரூபாயில் கட்டப்பட்ட வீட்டுக்கு, இன்று 20 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு, ஒட்டுமொத்தப் பகுதியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தங்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாரிசாக வழங்கிய தங்களது பூட்டனான அண்ணாமலைக்கும், அந்த காலத்தில் இந்த கலைநயமிக்க கட்டடத்தை இழைத்து இழைத்து கட்டிய கூலித் தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி செலுத்துவதையே தங்களின் கடமையாகக் கருதி, இந்த ஐந்தாவது தலைமுறை குடும்பத்தார்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது அன்பான வீட்டிற்கு முறைப்படி ‘நூற்றாண்டு விழா’ எடுத்து ஊரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
நெகிழ்ச்சியான ஆன்மீகக் கொண்டாட்டம்: இந்த வீட்டின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாகவும், ஆன்மீக மணம் கமழும்படியும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்திமயமான பஜனை நிகழ்ச்சி, சுவாரசியமான பட்டிமன்றம், கண்கவர் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி பரவசமூட்டும் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் வீதி உலா போன்றவை வெகு சிறப்பாக நடைபெற்றன. நேற்றிரவு சிறப்பு பூஜைகள், தியானம் மற்றும் திவ்ய நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகக் கொண்டாட்டங்களுடன் இந்த வீட்டிற்கான நூற்றாண்டு விழா மிக பிரம்மாண்டமாக களைகட்டியது. ஒரு வீட்டிற்கு நூற்றாண்டு விழா எடுத்து, அதற்குக் காரணமான தொழிலாளர்களை நெகிழ்வோடு நினைவுகூர்ந்த இந்த செட்டிநாட்டு குடும்பத்தின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
கேரேஜை நோக்கிச் செல்லும் ஒரு சாதாரண அன்றாடப் பயணம், ஒரு நொடியில் மிகக் கொடூரமான "கனவாக" மாறும் என்று 25…
ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…