தேவர் மகன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தும் வாங்காத சிவாஜி கணேசன் – கமல்தான் தடுத்தாரா?

By vinoth

Updated on:

1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் திரைக்கதை வசனத்தில் தேவர்மகன் திரைப்படம் வெளியானது. இந்த படமும் காட்பாதர் திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்டதுதான். மணிரத்னம் காட்பாதர் திரைப்படத்தை ஒரு கோணத்தில் தழுவி நாயகன் உருவாக்கி இருந்தார் என்றால், கமல்ஹாசன் அதை வேறொரு கோணத்தில் தழுவி உருவாக்கி இருந்தார்.

இந்த படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் மூவி மேஜிக் எனும் திரைக்கதை சாப்ட்வேரில் எழுதினார். அப்போதுதான் அந்த தொழில்நுட்பம் அறிமுகமாகியிருந்தது. அதைப் பற்றி அறிந்த கமல், உடனடியாக அதைப் பயன்படுத்தினார். இதனால் 10 நாட்களுக்குள் அந்த திரைக்கதையை அவர் முடித்தார் என்று சொல்லப்படுகிறது.

   

இந்த படத்தில் கமல்ஹாசனோடு சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி, வடிவேலு, ரேணுகா, நாசர், காக்கா சீனிவாசன் என பலர் நடிக்க மலையாள இயக்குனர் பரதன் இயக்கினார். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் வைரல் ஹிட்டாகின. இந்த படம் 1992 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமாக ஓடியது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற்ற தேசிய விருதுகள் விழாவில் இந்த படத்துக்கு சில தேசிய விருதுகள் கிடைத்தன. அதில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான நடுவர்களின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர் சென்று வாங்கவில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான காரணத்தை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அதில் “அந்த படத்தில் சிவாஜி கணேசன்தானே கதாநாயகன், அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதுதானே கொடுக்க வேண்டும். ஏன் நடுவர்கள் வழங்கும் சிறப்பு விருது. அதனால் நான்தான் சிவாஜி சாரிடம் நீங்கள் அந்த விருதை சென்று வாங்கவேண்டாம் எனக் கூறிவிட்டேன்” என கூறியுள்ளார்.

ஆரம்பம் முதலே சிவாஜி கணேசன் மிகை நடிப்பை வெளிப்படுத்துவதாகக் கூறி அவருக்கு தேசிய விருதுகள் கொடுக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.