தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் அவரின் பயோபிக் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்துக்கும் அவரே இசையமைக்கிறார். இளையராஜாவைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் தன்னுடைய வாழ்க்கையை இசைக்கும் ஆன்மீகத்துக்கும் மட்டும் ஒப்புக் கொடுத்து வாழ்பவர் என்பது தெரியும். தன்னுடைய வாழ்க்கையை ஒரு துறவி போல வாழ்ந்து வருகிறார்.
ஆனால் இளையராஜா சினிமாவில் வெற்றி பெற்ற ஆரம்ப காலங்களில் பார்ட்டி கலாச்சாரங்களில் அவரும் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவ்வப்போது குடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது என்று அவரோடு பழகிய நண்பர்கள் பகிர்ந்துள்ளனர். அதை இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனே உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல கதாசிரியர் அன்னக்கிளி செல்வராஜ் இளையராஜா தன்னோடு கோபித்துக் கொண்ட ஒரு சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “அப்போது இளையராஜா இசையமைப்பாளர் ஆகியிருக்கவில்லை. வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்த காலம். நான் அவரைப் பற்றி கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்திடம் சொல்லி வைத்திருந்தேன். அவர் ஒருநாள் அழைத்து வா என்றார்.
இதை சொல்லி நான் இளையராஜாவை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். அப்போது பஞ்சு அருணாச்சலம் கதை எழுதிக்கொண்டு சரக்கடித்துக் கொண்டிருந்தார். போனதும் வழக்கமான பேச்சுகள் எல்லாம் முடிந்து எனக்கும் சரக்கை ஊற்றிக் கொடுத்தார். நான் வாங்கிக்கொண்டேன். இளையராஜாவை பார்த்து ‘உனக்குப் பழக்கம் இருக்கா’ எனக் கேட்டார். நான் முந்திக்கொண்டு ‘அவனுக்கு அந்த பழக்கம் இல்லை’ என சொல்லிவிட்டேன்.
பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து வெளியே வந்த போது இளையராஜா என்னிடம் “நீ ஏன் நான் குடிக்கமாட்டேன் என சொன்ன? நீ மட்டும் குடிச்ச” எனக் கோபப்பட்டார். நான் அவரிடம் “ராஜா நீ சரக்கப் போட்டா கண்டதையும் பேசுவ. உனக்கு வாய்ப்புக் கேட்க வந்திருக்கோம். நீ எதாவது பேசி வாய்ப்புக் கெடைக்காம போச்சுன்னா என்ன பண்றதுன்னு சொன்னேன். ஆனாலும் அவருக்கு என் மேல் கோபம் போகவில்லை” எனக் கூறியுள்ளார்.
