ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை தொடங்கியதும் மதிப்பீட்டாளராக வேலை பார்த்த ரமேஷ் குமார்(45) தலைமறைவானார். நேற்று தலைமறைவான ரமேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இதனை அறிந்ததும் வங்கி மேலாளரான கதிரவன்(55) என்பவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது போலீசார் வங்கி மேலாளர் கதிரவனின் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அவருக்கு நெஞ்சுவலி இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக கதிரவன் நாடகமாடியது தெரியவந்தது. இதனால் கதிரவனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் செந்தில்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கதிரவன், ரமேஷ் குமார் இருவரும் கையாடல் செய்த 8. 25 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
