அழைப்பு வந்தும் இதனால்தான் நான் மலையாள சினிமாவில் நடிக்கவில்லை.. உள்ளதை ஓப்பனாக சொன்ன சரோஜா தேவி..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

   

இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். வயது முதிர்வு காரணமாக இப்போது அவர் எந்த படத்திலும் நடிப்பதில்லை. சரோஜா தேவி எத்தனையோ தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் கடைசி வரை அவரின் மழலை தமிழ் மாறவே இல்லை. ஆதவன் படத்தில் கூட அவரின் மொழி மாறாமல் அப்படியே இருந்தது.

சரோஜா தேவியின் தனித்தன்மையே அவருடைய ஆடை அலங்காரமும் மேக்கப்பும்தான். அவருக்கான ஆடைகளை எல்லா படத்திலும் அவரேதான் தேர்ந்தெடுப்பாராம். அதுபோல மேக்கப் கூட தானே போட்டுக்கொள்வாராம். இதுதான் அவரின் திரைக்கவர்ச்சியின் ரகசியம் எனக் கூறியுள்ளார்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்திருந்தாலும் சரோஜா தேவி மலையாளப் படங்களில் மட்டும் நடிக்கவில்லை. அது குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமனன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சரோஜா தேவி “அப்போது அவர்கள் படங்களில் மாராப்பு அணியும் வழக்கம் இல்லை. வேட்டி மற்றும் ஜாக்கெட் அணிந்து முண்டு மட்டும் போட்டுக் கொள்வார்கள். எனக்கு அந்த உடையில் நடிக்க விருப்பம் இல்லை. அதனால்தான் நான் மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இப்போது அந்த உடைக் கலாச்சாரம் மாறிவிட்டது” எனக் கூறியுள்ளார்.