விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை மோனிஷா ப்ளஸ்ஸி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும், விஜயுடன் பணியாற்றியது கனவு நனவானது போன்ற உணர்வைத் தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் மரியாதையுடன் நடத்தும் விஜய், மோனிஷா மைம் செய்யும் வீடியோக்களைப் பார்த்துப் பாராட்டியதுடன், அவரது குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகவும் நெகிழ்ந்துள்ளார்.
மோனிஷா ஒருமுறை விஜய் அமர்ந்தபடி கண் அயர்ந்திருந்த போது, “சார் தூங்குகிறீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய், “அதான் நீங்களே எழுப்பிவிட்டீர்களே” என்று கிண்டலாகவும், மிக இயல்பாகவும் பதில் அளித்துள்ளார். ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், மிக எளிமையாகப் பழகிய அவரது குணம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தந்ததாக மோனிஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
