தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முறைப்படி அறிவித்தார். இந்த வரும் சட்டசபைத் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். இந்த முக்கிய அறிவிப்புடன், இளைஞர்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான பல்வேறு அதிரடி வாக்குறுதிகளையும் அவர் மேடையில் வெளியிட்டார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், 12-ஆம் வகுப்பு முதல் பிஎச்டி வரை படிக்க 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என விஜய் உறுதியளித்துள்ளார். மேலும், அரசுப் பணிகளுக்கு நிலையான ஆள் சேர்ப்பு அட்டவணை (TRATA) உருவாக்கப்படும் என்றும், 29 வயதுக்கு மேல் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு 4,000 ரூபாயும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 2,000 ரூபாயும் மாதந்தோறும் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் மின் கட்டணத்தில் மானியம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பாக, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கடும் சட்டங்கள் இயற்றப்படும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ‘முதல்வர் மக்கள் சேவை நண்பர் திட்டம்’ மற்றும் மாநில கலாசாரத்தை உலகளவில் கொண்டு செல்ல ‘நவீன படைப்பாளி பள்ளிகள்’ உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களையும் தவெக தலைவர் விஜய் இந்த நிகழ்வில் முன்மொழிந்துள்ளார்.
