மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா பூஜை நிகழ்வின்போது பாம்பு கடித்து உயிரிழந்தார். அரசு அதிகாரிகளாலும் பாம்புகளைப் பிடிக்க அடிக்கடி அழைக்கப்படும் அளவிற்கு அனுபவம் வாய்ந்தவராக இவர் திகழ்ந்தார்.
மானசா பூஜையின் ஒரு பகுதியாக, உயிருள்ள பாம்புகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் பாரம்பரிய ‘ஜாபன்’ சடங்கை அவர் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டிக் கொண்டிருந்தார். அப்போது, தன் கழுத்தில் ஒரு பாம்பைச் சுற்றிக் கொண்டு சாகசம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பாம்பு அவரைக் கடித்துவிட்டது.
பாம்பு கடித்ததைத் தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வனவிலங்கு மீட்புப் பணிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு, மக்களிடையே பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த அனுபவம் வாய்ந்த ஒருவரின் இந்த அகால மரணம், அப்பகுதி மக்களிடையேயும் வனத்துறையினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
