மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது ஆண் நண்பரின் மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. புனேவைச் சேர்ந்த வர்ஷா தீபாவளி விடுமுறைக்காக மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், நவம்பர் 14, 2026 அன்று தனது நண்பர் நிதேஷ் அகர்வாலுடன் கோண்டியா மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது போந்த்ரானி கிராம வனப்பகுதியில் உள்ள சிவன் கோயில் அருகே இருவரும் நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் வர்ஷாவை சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடியதில் அவர் உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக ஆறு தனிப்படைகளை அமைத்து சுமார் 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் இம்ரான் ஷேக் என்பவரைப் பிடித்து விசாரித்தபோது இந்தச் சதித்திட்டம் அம்பலமானது. தனது கணவர் நிதேஷ் அகர்வாலுக்கும் வர்ஷாவுக்கும் இடையே கள்ள உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்ட நிதேஷின் மனைவி மோனா அகர்வால் (41), வர்ஷாவைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காகக் குணால் கும்பால்கர் மற்றும் ஷாருக்கான் பதான் ஆகியோர் மூலமாக ரூ 13 லட்சம் பேரம் பேசி கூலிப்படையை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
தனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த கணவரின் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலமாக அவரது நடமாட்டத்தை மோனா தொடர்ந்து கண்காணித்து, கூலிப்படையினருக்குத் துல்லியமாகத் தகவல் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் காரைப் பின்தொடர்ந்த கூலிப்படையினர் வனப்பகுதியில் வைத்து வர்ஷாவைக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மோனா அகர்வால் உள்ளிட்ட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
