ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பிறந்த பெண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த நாகபாண்டி – லோகநந்தினி தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், லோகநந்தினி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் அவருக்கு வீட்டிலேயே பிரசவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
பிரசவத்தைத் தொடர்ந்து லோகநந்தினிக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பிறந்த குழந்தை குறித்து விசாரித்தபோது, பிரசவத்திலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், குழந்தை உயிரிழந்தது குறித்து காவல்துறையினருக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல், குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட்டின் அருகிலேயே குழந்தையைப் புதைத்தது மருத்துவர்களுக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டின் அருகே புதைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதா என்ற கோணத்தில் நாகபாண்டி, அவரது தந்தை கிருஷ்ணா மற்றும் சகோதரி முனீஸ்வரி ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
