பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், சிறையில் இருந்து உயிருடன் திரும்புவது கடினம் என்றும் கூறி பாகிஸ்தானின் உயர்மட்ட நீதிபதிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக அவரது வழக்கறிஞர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ராவல்பிண்டியில் உள்ள ஆடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கான், 2025 டிசம்பர் 20-ஆம் தேதி முதல் தினமும் 22 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டு வெளி உலகத் தொடர்பின்றி இருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வைத் திறனை இழந்துவிட்டதாகவும், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி புஷ்ரா பீபியின் உடல்நலனும் சிறையில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், தான் இந்தக் கடிதத்தை ஒரு முன்னாள் பிரதமராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ எழுதவில்லை என்றும், பாகிஸ்தானுக்காகக் கிரிக்கெட் விளையாடி, மக்கள் பணியாற்றிய ஒரு குடிமகனாகவே எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார். வாழ்நாளில் கட்டணமில்லா மருத்துவமனைகளைக் கட்டிய தனக்கும், தனது மனைவிக்கும் தற்போது முறையான மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும், சிறைச்சாலை மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார். தனக்கு எந்தவிதச் சிறப்புச் சலுகைகளும் தேவையில்லை என்றும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த மருத்துவ சிகிச்சை தொடர்பான உத்தரவுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிருடன் இருந்தால் மட்டுமே ‘நான் நிரபராதி’ என்பதை நிரூபிக்க முடியும் என்பதால், மனிதநேய அடிப்படையில் காலம் கடக்கும் முன் நீதி வழங்குமாறு நீதிபதிகளிடம் இம்ரான் கான் முறையிட்டுள்ளார். 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராகப் பதவி வகித்த இம்ரான் கான், 2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியை இழந்தார். அதன் பின்னர் அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 2023 முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
