தமிழக அரசியலில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) மாநில உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்களே இந்தக் கண்காணிப்புக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது சட்டமன்றத்தில் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குப் போதுமான பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், கட்சி மாறி வாக்களிப்பதைத் தடுக்கும் நோக்கில் முதல்வர் விஜய் சமீபத்தில் கட்சி எம்எல்ஏக்களை அழைத்து ஆலோசனை நடத்தியதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருவதும், தவெக எம்எல்ஏக்கள் பலர் அதிருப்தியில் உள்ளதாகவும் அதிமுக ஆட்சி அமையும் என அக்கட்சியினர் கூறி வருவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மூலமாகத் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலை வீசப்பட்டு வருவதாகவும், இதனை முறியடிக்க உளவுத்துறை மூலமாக எம்எல்ஏக்களின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகவும் ‘தினமலர்’ வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், ஆளும் கட்சியினர் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து இரு தரப்பிலும் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
