“ரொம்ப தொந்தரவா இருக்கு…” 2 1/2 வயது பிஞ்சு குழந்தையை ஓடையில் வீசி கொன்ற தாயின் உறவினர்… கள்ளக்காதலால் விபரீதம்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on கார்த்திகை 17, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தில், தாயின் திருமணத்திற்குப் மீறிய உறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, இரண்டரை வயது பச்சிளம் பெண் குழந்தையைத் தாயின் உறவினரே ஓடையில் தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 11-ஆம் தேதி திடீரெனக் காணாமல் போனார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையில், சிறுமியும் அவரது தாயும் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் முஃபசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நர்சந்தா கிராமத்தில் உள்ள அத்தை மகன் சமீர் பான் என்பவரது வீட்டிற்குச் சென்றிருந்தது தெரியவந்தது. சமீர் பானுக்கும் சிறுமியின் தாய்க்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளதும், இருவரும் வேறு இடத்திற்குச் சென்று ஒன்றாக வாழத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் அம்பலமானது.

   

ஆனால், தங்களது புதிய வாழ்க்கைக்கு இரண்டரை வயதுக் குழந்தை இடையூறாக இருக்கும் என்று கருதிய சமீர் பான், அந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 11-ஆம் தேதி ஏதோ ஒரு காரணத்தைக் கூறிச் சிறுமியை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்ற அவர், அருகிலிருந்த ஓடையில் குழந்தையைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், எதுவுமே தெரியாதது போல் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகக் கூறிப் போலீசாரைத் திசைதிருப்ப முயன்றுள்ளார்.

   

இருப்பினும், அவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சிலும் நடவடிக்கைகளிலும் சந்தேகமடைந்த முஃபசில் காவல்துறையினர், அவரைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டதில், குழந்தையைக் கொன்றதைச் சமீர் பான் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கிராமத்திற்கு அருகிலுள்ள வடிகால் பகுதியில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், கொலையாளி சமீர் பானைக் கைது செய்த போலீசார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.