என்னது… தயிர் பாக்கெட்டுக்குள் சிம் கார்டா?… போலீஸ் விசாரணையில் வெளியான அதிரடித் திருப்பம்… வீடியோ வெளியிட்ட நபர் கைது…!

By Swetha on கார்த்திகை 16, 2026

Spread the love

கே.எம்.எஃப் நந்தினி தயிர் பாக்கெட்டிற்குள் ஜியோ சிம் கார்டு இருந்ததாகக் கூறப்பட்ட வழக்கில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தூர் தாலுகா சன்னசந்திரா கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான அருண் குமார் என்பவர், நந்தினி தயிர் பாக்கெட்டில் சிம் கார்டு இருந்ததாகச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ கர்நாடகா முழுவதும் வைரலாகி, நந்தினி பொருட்களின் தரம் குறித்துப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மன்முல் சந்தை மேலாளர் பிரசாத் அளித்த புகாரின் பேரில், மத்தூர் காவல் ஆய்வாளர் நவீன் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை மாலை அருண் குமாரைக் கைது செய்தனர்.

காவல்துறை விசாரணையில், அந்த சிம் கார்டு தயிர் பாக்கெட்டிற்குள் இல்லை என்பதும், அது பாக்கெட்டின் வெளிப்புறத்தில் தற்செயலாக ஒட்டியிருந்ததும் தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை பேருந்து நிலையம் அருகே உள்ள நந்தினி பாலகத்தில் தயிர் பாக்கெட்டை வாங்கிய அருண், அதனைத் தனது இருசக்கர வாகனத்தின் பையில் வைத்திருந்தபோது, அங்கிருந்த சிம் கார்டு பாக்கெட்டின் வெளிப்புறத்தில் ஒட்டிக்கொண்டுள்ளது. பின்னர் பாக்கெட்டை வெட்டிப் பாத்திரத்தில் தயிரை ஊற்றியபோது, வெளிப்புறத்தில் ஒட்டியிருந்த சிம் கார்டும் உள்ளே விழுந்ததைச் சரியாகக் கவனிக்காமல், அது பாக்கெட்டிற்குள் இருந்து வந்ததாக நினைத்து அவசரப்பட்டு வீடியோ வெளியிட்டதாக அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

   

https://twitter.com/HateDetectors/status/2121556025363030402/video/1

   

மேலும், அந்த சிம் கார்டு அருண் குமாரின் மைத்துனர் பெயரில் பதிவு செய்யப்பட்டு, அவரது மனைவி என். சுதாவால் பயன்படுத்தப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. உண்மை வெளிவந்ததைத் தொடர்ந்து, தவறுதலாகப் புரிந்துகொண்டு பதற்றத்தில் இவ்வாறு செய்துவிட்டதாகவும், நந்தினி பொருட்கள் தரமானவை என்றும் கூறி அருண் குமார் மன்னிப்புக் கோரி மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில், தனியார் பால் நிறுவனங்களுடன் தொடர்புடைய அருண் குமார், நந்தினி தயிரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இவ்வாறு செயல்பட்டதாக மன்முல் தலைவர் ஹரிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.