அசாம் மாநிலம் கவுகாத்தியில், அருணாப் கலிதா என்ற 12-ஆம் வகுப்பு மாணவர் தனது தாயார் சந்திராணி கலிதாவை கத்தியால் குத்திவிட்டு, உயரமான கட்டிடத்தின் 10-வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஜோதிநகரில் உள்ள தனது வீட்டில் தாயைத் தாக்கிய அந்த மாணவர், இது குறித்து தனது பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் அதிர்ச்சியூட்டும் தகவல்களையும், தான் இருந்த மயூர் ஹைட்ஸ் கட்டிடத்தின் இருப்பிடத்தையும் பகிர்ந்துள்ளார்.
தகவலறிந்த பள்ளி முதல்வர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சந்திராணியை மீட்டு கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும், இருப்பினும் நீண்ட கால சிகிச்சை தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், மயூர் ஹைட்ஸ் வளாகத்திலிருந்து மாணவர் அருணாபின் உடலைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர். படிப்பில் மிகவும் கெட்டிக்காரராகவும், ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவராகவும் இருந்த அருணாபின் இந்த விபரீத முடிவிற்குப் பின்னால் மூன்றாம் நபரின் தலையீடு உள்ளதா என்ற கோணத்தில் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
