மதம் வேறு… மனிதநேயம் ஒன்றுதான்… இறந்த பிறகும் தனியாக விடவில்லை… 85 வயது மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த முஸ்லிம் சகோதரர்கள்…!!

By Gayathri on கார்த்திகை 13, 2026

Spread the love

கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா என்பவர் வாரிசுகளோ, நெருங்கிய உறவினர்களோ இன்றி தனியாக வாழ்ந்து வந்தார். சுமார் 50 ஆண்டுகளாக அவருக்கு அண்டை வீட்டாராக இருந்த ரசாக் மற்றும் அவரது சகோதரர் சுலைமான் ஆகிய இரு முஸ்லிம் சகோதரர்களும், அவரைத் தங்களது குடும்பத்தில் ஒருவராகவே கருதி அன்புடன் கவனித்து வந்தனர். முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை, மருந்துகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வந்தனர்.

இந்நிலையில், கல்யாணி அம்மா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகளை நடத்த யாரும் இல்லாத சூழலில் ரசாக்கும் சுலைமானும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். பூசாரியின் வழிகாட்டுதலின்படி இந்து முறைப்படி அனைத்து இறுதிச் சடங்குகளையும் அந்தூர் மயானத்தில் அவர்கள் நிறைவேற்றினர். ரசாக்கின் மனைவி ருகியாவும் கல்யாணி அம்மாவைத் தனது தாயைப் போலவே பராமரித்து வந்துள்ளார். மதம், சாதி என எந்த வேறுபாடும் பார்க்காமல் இறுதிவரை அன்பையும் ஆதரவையும் வழங்கிய இந்தக் குடும்பத்தினரின் செயல், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது.