டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லி எய்ம்ஸ் சாலைப் பகுதியில் பூ மற்றும் மாலைகளை விற்றுவரும் ஏழைப் பெண்மணி ஒருவர், கடந்த சின்ன தீபாவளி இரவில் மர்மக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சோனி என்ற போதைப்பொருள் மாஃபியா கும்பலின் தலைவர், அந்தப் பெண்ணிடம் போதைப்பொருள் விற்கும்படி வற்புறுத்தியுள்ளான். அதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்ததால், அவனது கூட்டாளிகள் அங்கு வந்து அவரை லத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கடந்தும் ஹவுஸ் காஸ் காவல்துறையினர் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தெருவோர வியாபாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், டெல்லியில் செயல்படும் போதைப்பொருள் வலைப்பின்னலை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
