கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புத்துப்பண்டியாரைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி நந்தனா. சிறந்த பரதநாட்டியக் கலைஞரான இவர், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கருங்கல் அருகே உள்ள மதிங்கோட்டைப் பகுதியில் இவர் சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபட்டில் படுகாயமடைந்த சிறுமி நந்தனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தின் அதிக வேகமே இந்த கோர விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்டமாக அஞ்சப்படுகிறது. இளம் வயது கலைஞர் விபத்தில் உயிரிழந்த தகவல் அறிந்த அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் கதறி அழுத காட்சி காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
