கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் பல ஆண்டுகளாகக் கிராமத்திற்குத் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிப்பு இல்லாமல் கிடந்த அந்த கிணற்றைச் சின்னையன் குடும்பம் சீரமைத்துத் தங்களின் தேவைக்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்து நாட்டாமை மற்றும் ஊர் மக்கள், தன்னிச்சையாக எப்படிப் பயன்படுத்தலாம் எனக் கூறி பஞ்சாயத்து கூட்டியுள்ளனர். மேலும், ரூ.3 லட்சம் அபராதம் மற்றும் கிராமத்திற்கு 3 செட் இடம் எழுதித் தர வேண்டும் எனத் தாள முடியாத ஊர்க்கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த சின்னையன் மற்றும் அவரது குடும்பத்தை கடந்த 5 ஆண்டுகளாகக் கிராமத்தை விட்டு முழுமையாக ஒதுக்கி வைத்துள்ளனர். ஊரில் யாரிடமும் பேசக்கூடாது, எந்த உறவு முறையும் வைத்துக் கொள்ளக்கூடாது எனத் தனிமைப்படுத்தப்பட்டு மனவேதனையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் தனபாக்கியம் நேற்று உயிரிழந்தார். ஆனால், இறந்த பிறகும் அந்தக் குடும்பத்திற்கு எதிராகக் கொடூரக் கட்டுப்பாடு தளர்த்தப்படவில்லை. “யாரும் சடலத்தை எடுக்க உதவக் கூடாது, புதைப்பதற்கு ஊரில் இடம் தரக் கூடாது” என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்துப்போன பிள்ளைகள், தங்களது தாயின் சடலத்தை வீட்டிலேயே வைத்துக்கொண்டு கதறி அழுதுவரும் காட்சி காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
