கர்நாடக மாநிலம் பெளகாவி மாவட்டத்தில் தன் கார் ஓட்டுநர் பிரியகரனுடன் சேர்ந்து வாழ, அதற்குத் தடையாக இருந்த சொந்த மகனையே தாயொருவர் திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த 44 வயதான மீனா நாராயணா, பெங்களூருவில் தனது 24 வயது மகன் விஜய் நாராயணனுடன் வசித்து வந்தார். தான் மேலாளராகப் பணியாற்றிய பியூட்டி பார்லரில் அறிமுகமான கார் ஓட்டுநர் ராகேஷ் ஜாமுனி (34) என்பவருடன் மீனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த மகன் விஜய், தாயின் நடத்தையைக் கண்டித்து அந்த நபரை விட்டு விலகி இருக்குமாறு எச்சரித்துள்ளார்.
தங்கள் காதலுக்கு முட்டுகட்டையாக இருக்கும் மகனை ஒழித்துக் கட்ட மீனாவும் அவரது கள்ளக்காதலன் ராகேஷும் சதித்திட்டம் தீட்டினர். நவம்பர் 1 ஆம் தேதி, கர்நாடக ராஜ்யோத்சவா விழாவைக் காணப் போவதாகக் கூறி, விஜயை ராகேஷின் காரில் பெளகாவிக்கு அழைத்துச் சென்றனர். பயணத்தின் போது, குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளைக் கலந்து விஜயை மயக்கமடையச் செய்து, காரினுள்ளேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் அவனது உடலை பெளகாவி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள ஒரு சாக்கடைக் கால்வாயில் வீசிவிட்டுத் தப்பியோடினர்.
சாலையோரம் அடையாளம் தெரியாத இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாலமாருதி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மொபைல் போன் அழைப்பு விவரங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், பெற்ற தாயே தனது பிரியகரனுடன் சேர்ந்து மகனைக் கொன்றதை போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த கொடூரக் குற்றத்திற்காக தாய் மீனா, அவரது கள்ளக்காதலன் ராகேஷ் ஜாமுனி மற்றும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்த சச்சின், மனோஜ், தம் மன்னா, ஏக்நாத் ஆகியோருடன் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 7 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
