செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற 109 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், பிற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டதோடு, கோவளம் முதல் மாமல்லபுரம் வரை ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அண்மைக்காலமாக தவெக மக்கள் பிரதிநிதிகள் மீது தொடர்ந்து சில சர்ச்சைகளும் புகார்களும் எழுந்து வருவது கட்சித் தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, துறையூர் தொகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்கள் எதிர்க்கட்சிகளால் தீவிரமாக விமசிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், மக்கள் பிரதிநிதிகளின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் தொகுதிப் பணிகள் குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் விசாரித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த எம்.எல்.ஏக்கள் பலரும் மூன்று நாட்களுக்கு ரிசார்ட்டில் தங்க வைக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் தனித்தனியாக அழைத்து முதல்வர் விஜய் பேசியதுடன், எதிர்க்கட்சிகளுக்கு இடம் கொடுக்காத வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ளும்படி கடுமையான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், கட்சியின் எதிர்கால அரசியல் மற்றும் மக்கள் நலப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், கட்சியின் நற்பெயரைக் காக்கவும் தலைமை கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளைத் தவிர்க்காது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
