தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், சட்டம் ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தனிப்பெரும்பான்மை இல்லாத சவால்களுக்கு மத்தியில், அரசுக்குக் கூடுதல் தலைவலியாகத் தவெக எம்எல்ஏ-க்களின் சில சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் உருவெடுத்துள்ளன. குறிப்பாக, துறையூர் தொகுதியின் உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர், தொகுதிவாசி ஒருவரைத் தாக்கியதாக எழுந்துள்ள புகார் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் முதலில் மிரட்டல் காரணமாகவே சமரச வீடியோ வெளியிடப்பட்டதாகக் கூறிய குற்றச்சாட்டு அரசுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளும் ரவிசங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், முதல்வர் விஜய் உடனடியாகக் கட்சித் தலைமை நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தவறு செய்பவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதன் மூலமே கட்சிக்கும் ஆட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரைத் தடுத்து, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கட்சித் தலைமை கருதுகிறது.
இதன் ஒரு கட்டமாக, ரவிசங்கர் வகித்து வரும் துணை சபாநாயகர் பதவியைப் பறிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு அமைந்தபோது தற்காலிக சபாநாயகராகப் பொறுப்பு வகித்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவிடம் இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள எம்எல்ஏ-க்களுடனான முக்கியக் கூட்டத்திற்குப் பிறகு, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி முடிவு, கட்சியின் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமையும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில், ஆளும் கட்சியின் மீதான நற்பெயரைக் காக்கவும், எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும் முதல்வர் விஜய் மேற்கொண்டுள்ள இந்தத் துறை சார்ந்த நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
