குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வதற்காக 2012-ஆம் ஆண்டு இந்தியாவில் போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் குழந்தைகளாகக் கருதும் இச்சட்டம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலனைக் கருத்தில் கொண்டு, அடையாளங்களை மறைத்தல், சிறப்பு நீதிமன்ற விசாரணை மற்றும் நம்பிக்கையான நபரின் முன்னிலையில் வாக்குமூலம் பெறுதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது.
இருப்பினும், சட்டம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் முற்றிலும் குறைந்தபாடில்லை என்பது வேதனையளிக்கும் நிதர்சனமாகும். நாள்தோறும் போக்சோ சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு வரும் சூழலில், ஒழுக்கத்தையும் நன்னெறியையும் போதிக்க வேண்டிய பள்ளி ஆசிரியர்களே இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுவது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்து அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு 2-ஆம் வகுப்பு பயிலும் சிறிய பெண் குழந்தையிடம், அதே பள்ளியில் பணியாற்றும் 48 வயதான ஆசிரியர் சரவணகுமார் கடந்த சில நாட்களாகத் தவறான முறையில் நடந்து கொண்டு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அக்குழந்தை தைரியமாகத் தன் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, இக்கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
தகவலறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆம்பூர் தாலுகா போலீசார், ‘சிங்கப்பெண்’ படையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேனகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் சரவணகுமாரை தீவிர விசாரணைக்குப் பின் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
