செங்கல்பட்டு அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த கணவன் மற்றும் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேலு (41) மற்றும் அவரது மனைவி கவிதா என்ற பச்சையம்மாள் (38) ஆகியோர், தங்கள் மூன்று வயது ஆண் குழந்தையுடன் ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனத்தில் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இருகுன்றம் பள்ளி – மாமண்டூர் இடையேயான மெய்யூர் சந்திப்பு அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த எம்-சாண்ட் மணல் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தம்பதியினர் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பெற்றோர் இருவரையும் பறி கொடுத்த அந்த மூன்று வயது குழந்தை, முகத்தில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
விபத்து குறித்து தகவலறிந்த படாளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லேசான காயமடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த கணவன்-மனைவியின் உடல்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைக் கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடல்களை மீட்பதற்கும் வாகனங்களை அகற்றுவதற்கும் நேரம் பிடித்ததால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்து வாகன இயக்கத்தை இயல்புநிலைக்குக் கொண்டு வந்தனர்.
