மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாகவே தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்று மாநில அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் நிலையைக் காரசாரமாக எடுத்துரைத்த அரசு வழக்கறிஞர், ஒன்றிய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே உள்ளாட்சித் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பின்னரே, அதனடிப்படையில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு நடைமுறைகள் உள்ளிட்ட முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பிறகே தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் பணிகளும் தொடங்கும் என்றும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட உயர் நீதிமன்றம், வழக்கில் அடுத்தகட்ட உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.
