தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் மாநிலம் தழுவிய அளவில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தீபாவளி பண்டிகையின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 8 கொலைகள் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் சட்டம்-ஒழுங்கு டிஜிபி சிறப்பு உத்தரவை பிறப்பித்தார்.
டிஜிபியின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளை வேட்டையாடும் தீவிர ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் 443 பேர் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆவர். தலைநகர் சென்னையில் மட்டும் 36 முன்னணி ரவுடிகளை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையின் இந்தத் தொடர் அதிரடி நடவடிக்கையால் குற்றவாளிகள் கலக்கமடைந்துள்ளனர்.
