கரூரில் 1500 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், செருப்பு அணிந்தபடி கோவில் வளாகத்திற்குள் சென்ற விவகாரம் தற்பொழுது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் பகுதியில் சுற்றுலாத்துற சார்பில் படகு இல்லம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் ராஜேஷ்குமார் தலைமையில் உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க அகஸ்தீஸ்வரர் கோவிலில் தற்போது நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது, கோவிலின் புனிதத்தைப் பேணாமல் ராஜகோபுரத்தைக் கடந்து கோவில் வளாகத்திற்குள் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் செருப்பு அணிந்தபடியே ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். ஆன்மிக நம்பிக்கையும் தொன்மையும்கொண்ட ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் செருப்புடன் சென்ற புகைப்படங்கள் வெளியாகி, பக்தர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளன.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரின் பேச்சு மேலும் குழப்பத்தைக் கூட்டியது. கோவில் புனரமைப்புப் பணிகள் தாமதமாவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜேஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்குச் சென்று பணிகளை விரைவுபடுத்துவதாகக் கூறுவதற்குப் பதிலாக, “சுற்றுலாத்துறை அமைச்சர் ரமேஷின் கவனத்திற்கு எடுத்துச் சென்று துரிதப்படுத்தப்படும்” எனத் தவறாகக் குறிப்பிட்டார். தனது சொந்தத் துறையையும், சக அமைச்சரின் பெயரையும் மாற்றிப் பேசியதும், புனிதமான கோவிலில் செருப்புடன் ஆய்வு மேற்கொண்டதும் தற்பொழுது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
