தெலங்கானா மாநிலம் கோத்தியில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகம் முன்பாக, கடந்த 34 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி மாணவர்களைப் போலீசார் இன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வந்த தங்களுக்கு, மற்ற இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இணையான மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 29,792 வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 2026 முதல் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இந்த உதவித்தொகையின் நிலுவைப்பணம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும், அது தங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
https://twitter.com/TeluguScribe/status/2120088666261667983/video/1
நீண்ட நாட்களாகியும் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு மற்றும் மருத்துவக் கவுன்சில் நிர்வாகம் உரிய செவிசாய்க்காததால் போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில், போராட்டக் களத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக, அவர்களைக் கலைந்துபோகச் சொல்லி வலுக்கட்டாயமாகக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
