“பட்டாசா? கொலைச் சத்தமா?”…. தீபாவளியன்று அரங்கேறிய 11 படுகொலைகள்…. சினிமா செட் இல்லை அரசியல்…. முதலமைச்சரை சீண்டிய EPS…!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தன்று ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் 11 கொலைகள் அரங்கேறியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்திற்கு இணையாக தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் கொலைச் சத்தமே கேட்டதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, ரத்தக் களறியாக மாறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது நிலமையின் தீவிரத்தை உணர்த்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக, தேனியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ரவுடிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் சுட்டிக்காட்டிய அவர், “காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லாத போது சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது” எனக் குற்றம் சாட்டினார். மேலும், ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு காவல்துறை தனது கம்பீரத்தை இழந்து நிற்பதாகவும் அவர் விமர்சித்தார்.

   

படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள 40 லட்ச ரூபாய் நிவாரண நிதி போதுமானது அல்ல என்று தெரிவித்த அவர், கடமையின் போது உயிர்நீக்கும் காவலர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்ற அரசாணையை அரசே நினைவில் கொள்ளவில்லை என சாடினார். எனவே, உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

சமூகத்தில் குற்றவாளிகளும் ரவுடிகளும் அச்சமின்றி நடமாடும் வகையில் சட்டம் ஒழுங்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் என்பது வெறும் சினிமா செட் அல்ல என்றும் விமர்சித்தார். தமிழகத்தைப் பதற வைத்த இந்த 11 கொடூரக் கொலைகளில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகள் மீதும் அரசு உடனடியாக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.