திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற இளம்பெண்ணும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த ஓட்டுநரான அஜித்குமாரும் காதலித்து வந்தனர். இரு குடும்பத்தாரின் கடுமையான எதிர்ப்பையும் கடந்து, கடந்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். எனினும், இல்லற வாழ்க்கைத் தொடங்கிய சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தலைதூக்கவே, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழத் தொடங்கினர்.
தனியாக வசித்து வந்த ஸ்வேதா சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வீடியோக்களைப் பதிவிட்டு வந்ததால், அவரது நடத்தையின் மீது அஜித்குமாருக்கு சந்தேகம் உருவானது. இந்நிலையில், பண்டிகைக் காலத்தில் மனைவியைச் சந்திக்க வந்த அஜித்குமார், ஸ்வேதாவின் செல்போனைப் பார்த்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த அஜித்குமார் அரிவாளால் ஸ்வேதாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, எரியோடு காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த ஸ்வேதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் முடிந்த ஒரே ஆண்டிற்குள், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியையே கணவன் படுகொலை செய்த கொடூரம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
