“எனக்கு அரசியல் பிடிக்காது… 7 ஆண்டு அரசியல் பயணம் தரும் வேதனை”…. பலர் நிர்பந்தத்தால்தான் அரசியலுக்கு வந்தேன்…. கண்ணீர் விட்ட துரை வைகோ….!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மறைந்த மதிமுக ஒன்றியச் செயலாளர் கடலையூர் மாரிச்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது.

மாரிச்சாமியின் இழப்பைத் தாங்க முடியாமல் கண்ணீர் மல்கப் பேசிய துரை வைகோ, தனக்கு அரசியலில் துளியும் விருப்பமில்லை என்றும், பலரின் கடுமையான நிர்பந்தத்தினாலேயே தான் அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், “அரசியல்வாதிகளின் குணாதிசயங்களும் டிஎன்ஏ-வும் தனி; சாதாரண மனிதர்களால் இதில் பயணிக்க முடியாது” என்று தனது 7 ஆண்டு அரசியல் பயணத்தின் வேதனைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

   

மறைந்த மாரிச்சாமி தனது சொந்த ஊரான கடலையூர் மற்றும் சுற்றுவட்டார 30 கிராம மக்கள் பயன்பெறும் வகையில், துணை மின் நிலையம் அமைக்க ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கியதை அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். அந்தத் கோரிக்கையைத் தன் வாழ்நாளில் நிறைவேற்ற முடியாமல் போனது குறித்தும், அமைச்சர்களைச் சந்தித்து அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

   

இறுதியாக, குறுகிய கால மனித வாழ்க்கையில் வன்மமும் பகைமையும் எதற்கு என்று கேள்வி எழுப்பிய துரை வைகோ, பதவிகளுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் தலைமைக்கு எதிராகக் கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பவர்களை விமர்சித்தார். மதிமுக தலைவர் வைகோவைப் போன்று நற்பண்புகளுடன் வாழ்ந்து மறைந்த மாரிச்சாமியின் கனவான கடலையூர் துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.