கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், பிரித்திவிராஜ் என்ற ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அருளரசு என்பவனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள முந்திரிக்காட்டில் அருளரசு பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியை வளைத்துப்பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற அருளரசு, தன்னைச் சூழ்ந்த உதவி ஆய்வாளர் (SI) முகிலனைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதியும், குற்றவாளியைப் பிடிக்கும் நோக்கிலும் காவல் ஆய்வாளர் இளவரசி, அருளரசுவின் கணுக்காலில் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாகப் பிடித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அருளரசு உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
