உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் காரில் வந்தவர்களால் நெடுஞ்சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்த நபர்கள் சுமார் 4,000 ரூபாய் மதிப்பிலான எரிபொருளை நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது காரை நிறுத்த முயன்ற அந்த ஊழியரின் கையைப் பிடித்துக் கொண்ட காரின் ஓட்டுநர், வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார். இதனால் காரின் ஜன்னல் பகுதியை பிடித்துக் கொண்டபடி அந்த ஊழியர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் காரில் இருந்தவர்கள் அவரை சாலையில் தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடினர்.
https://twitter.com/IndiaToday/status/2119417708508856355/video/1
சாலையில் படுகாயமடைந்து மயங்கிக் கிடந்த அந்த ஊழியரை சக பணியாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பதைபதைக்க வைக்கும் முழு சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
