பட்டினி கிடந்து இயேசுவைக் காணச் சொன்ன கொடூரன்…. 190 குழந்தைகள் உட்பட 400 பேர் பலி…. கென்யா வழக்கில் அதிரடி தீர்ப்பு….!

By Nanthini on கார்த்திகை 8, 2026

Spread the love

கென்யாவில் ‘குட்நியூஸ் இண்டர்நேஷனல் சர்ச்’ என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டவர் பால் மெக்கன்சி. தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்ட இவர், குடும்பத்துடன் தீவிர பட்டினி விரதம் இருந்தால்தான் இயேசு கிறிஸ்துவை நேரில் காண முடியும் என அப்பாவி கிராம மக்களை நம்பவைத்து மூளைச்சலவை செய்துள்ளார். இவரது விபரீத பேச்சை நம்பி விரதம் இருந்த சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கென்யாவின் கிலிபி நகரில் உள்ள பால் மெக்கன்சிக்குச் சொந்தமான 800 ஏக்கர் பண்ணையில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தோண்டி எடுக்கப்பட்ட சுமார் 400 பேரின் உடல்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. இந்த வழக்கை விசாரித்த கென்யா நீதிமன்றம், 190 குழந்தைகள் உட்பட 191 பேரின் மரணத்திற்கு பால் மெக்கன்சியும் அவரது கூட்டாளிகளுமே காரணம் என்பதை கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.

   

இந்த கோரச் சம்பவத்திற்கு நீதி வழங்கும் விதமாக, இவ்வழக்கின் பிரதான குற்றவாளியான பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மொம்பாசா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதத்தின் பெயரால் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த போலிச் சாமியார்களுக்கு எதிரான இந்த அதிரடித் தீர்ப்பு, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.