விருந்தாவனைச் சேர்ந்த 19 வயது ஆன்மீக சொற்பொழிவாளரான ஸ்ரீ சாஷ்வத் ஆச்சார்யா ஜி மகாராஜ், சமூக ஊடகங்களில் அவரது தோற்றத்தைக் குறித்து வரும் தகாத கருத்துகளால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இணையவாசிகளால் ‘ஜென் ஜி பாபா’ என்று அழைக்கப்படும் இவர், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், சில பயனர்களின் கருத்துகள் நாகரீகத்தின் எல்லைகளை மீறி தன்னை ‘பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது’ போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
அவரது இளமையான மற்றும் அழகான தோற்றத்தின் காரணமாக சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் ஆன்மீகக் கருத்துக்களைத் தாண்டி, அவரது முக அமைப்பைக் குறித்துப் பலரும் வர்ணித்து வருகின்றனர். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, சாலையில் நடந்து செல்லும் பெண்கள் தினமும் எதிர்கொள்ளும் கேலி கிண்டல்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். தமக்கு வரும் இந்த வர்ணனைகளுக்கே தாம் இந்த அளவு வருத்தப்படும் போது, தினமும் பொது இடங்களில் மோசமான கருத்துகளை எதிர்கொள்ளும் பெண்கள் எவ்வளவு மனவேதனையை அனுபவிப்பார்கள் என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DfCfV4eyu5b/?utm_source=ig_web_button_share_sheet
விருந்தாவனில் உள்ள ஸ்ரீதாம் கோதா விஹார் கோவிலின் தலைவராக இருக்கும் சாஷ்வத் ஆச்சார்யா, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் ஆன்மீகத் தத்துவங்களையும் கதைகளையும் பகிர்ந்து வருகிறார். தற்போதைய இளைய தலைமுறையினர் பலரும் இவரது தோற்றத்தை விரும்பிக் கருத்துக்களைப் பகிர்ந்து வருவதால் இணையத்தில் இவர் பெரும் ட்ரெண்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
