அம்மா கைவிட்டாலும் நாங்க விடமாட்டோம்… மரணப் பிடியில் துடித்த குட்டி யானை… காப்பாற்ற களமிறங்கிய மீட்பு பணி… இணையத்தில் வைரல்…!

By Swetha on கார்த்திகை 8, 2026

Spread the love

கேரளாவில் பிறந்து ஒரு சில நாட்களிலேயே தனது கூட்டத்தால் கைவிடப்பட்ட மாயா என்ற 18 மாத குட்டி யானை, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் வந்தாரா வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்குச் சிறப்பு சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எலும்பு பலவீனம் மற்றும் கால்களில் ஏற்பட்ட கடுமையான முறிவுகள் காரணமாக இந்த குட்டி யானையால் எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, அதற்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை அளிப்பதற்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரளா காடுகளில் பிறந்த அன்றே இந்த யானைக்குட்டியை அதன் தாய் மற்றும் கூட்டம் கைவிட்டது. அதன்பின்னர், கேரள வனத்துறையினர் அதனை மீட்டு, ‘அபயாரண்யம்’ மறுவாழ்வு மையத்தில் வைத்து கடந்த 18 மாதங்களாகப் பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். ஆனால், கடந்த 2026 ஜூலை மாதம் விளையாடும் போது ஏற்பட்ட விபத்தால் அதன் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைகள் மற்றும் பிசியோதெரபி அளிக்கப்பட்ட போதிலும், எலும்பு மெலிதல் நோய் மற்றும் தொற்று காரணமாக அதன் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது.

   

ஒரு கட்டத்தில் குட்டி யானையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியதால், அதற்கு இறுதி முயற்சியாக வந்தாரா மையத்தின் மருத்துவ நிபுணர்களுடன் வீடியோ மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு, நவம்பர் 5 ஆம் தேதி கேரள வனத்துறையின் ஒப்புதலுடன் மாயா ஜாம்நகருக்கு ஏர்லிஃப்ட் செய்யப்பட்டது. தற்போது வந்தாரா மையத்தில் தங்கியுள்ள மாயாவிற்கு, 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பு, ஹைட்ராலிக் லிஃப்ட் மூலமாக நிலைநிறுத்துதல், வலி நிவாரண சிகிச்சைகள் மற்றும் நீர் சிகிச்சை போன்ற அதிநவீன மறுவாழ்வு முறைகள் மூலம் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.