தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த ஜஹீராபாத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரும், அவரது நண்பரான இப்ராகிம் பெக் என்பவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இவ்வாறு மது அருந்தும் போதெல்லாம் இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் எழுவது தொடர்கதையாக இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு போதையில் இருந்த சுதாகர், இப்ராகிமின் குடும்பத்தினர் குறித்து தகாத வார்த்தைகளைப் பேசியதாகத் தெரிகிறது.
இதனால் கடும் கோபமுற்ற இப்ராகிம், பேருந்து நிலையப் பகுதியில் சுதாகரைத் தாக்கி, அவரது தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொடூரமாகக் கொலை செய்தார். பேருந்து நிலையப் பணியாளர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, தாக்குதல் நடத்திய இப்ராகிமைக் கைது செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
