புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான இலவச அரிசி திட்டத்தின் கீழ், நேரடியாக அரிசி வழங்குவதற்குப் பதிலாக அதற்கான ரொக்கப் பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நிலுவையில் இருந்த 6 மாதங்களுக்கான அரிசி நிதியுதவி நேரடியாகத் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.860 வீதம், 6 மாதங்களுக்கான மொத்தத் தொகையான ரூ.5,160 பயனாளிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மஞ்சள் நிற ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.430 வீதம், 6 மாதங்களுக்கு மொத்தம் ரூ.2,580 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் இந்த நேரடிப் பணப் பரிமாற்றம், பண்டிகைக் காலங்களில் அம்மாநில ஏழை எளிய மக்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாக அமைந்தது. மேலும், இத்திட்டத்துடன் இணைந்து குடும்பத் தலைவிகளுக்கான ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதம் ₹2,500 நிதி உதவித் தொகையும், தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே தடையின்றி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரேஷன் அரிசி நிலுவைத் தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஆகிய இரண்டும் உரிய நேரத்தில் பயனாளிகளைச் சென்றடைந்துள்ளதால், புதுச்சேரி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
