சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பகிரும் பதிவுகள் அவ்வப்போது பெரும் விவாதங்களை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், கோலிவுட் திரையுலகில் தனக்கு வரும் வாய்ப்புகள், திரையுலகின் பிற்போக்குத்தனமான சிந்தனைகள் மற்றும் தனது சொந்த வாழ்க்கை முறை குறித்து நடிகை பிரதீபா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவுகள் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. பெண்களுக்கு இவ்வளவுதான் வரம்புகள் என்று வகுத்து வைப்பவர்களுக்கு அவர் தனது தைரியமான வார்த்தைகளால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கோலிவுட்டில் தனக்கு வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல இயக்குநர்களிடம் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உடைக்கும் கதாபாத்திரத்திற்கும் உள்ள தொடர்பைக் கேள்வி எழுப்பியுள்ளார். “நல்ல பெண் என்றால் புடவை அணிய வேண்டும், கெட்ட பெண் என்றால் ஷார்ட்ஸ் அணிய வேண்டும் என்றுதான் இன்னும் நினைக்கிறார்கள்” என்று சாடியுள்ள பிரதீபா, தான் எப்போதுமே வாய்ப்புகளைத் தேடி அலையவில்லை என்றும், தனக்கு ஆர்வத்தைத் தூண்டும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், ஒரு பிரபல மேனேஜர் தன்னை அணுகி, ஒரு வாய்ப்பை ஏற்றுக் கொண்டால் வீட்டுக்கு முன்னால் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும் என்று ஆசை காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த பிரதீபா, “வேண்டாம், ஆட்டோவில் பயணம் செய்வதிலேயே எனக்கு வசதியாக இருக்கிறது; எதிர்காலக் கனவுகள் நனவாகாவிட்டாலும் எனக்குப் பிரச்சினையில்லை” என்று கூறி, கோடிகளில் புரளும் ஆசையை விட தன்மானமும் எளிமையான வாழ்க்கையுமே தனக்கு முக்கியம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
தனது தனிப்பட்ட சுதந்திரம் குறித்தும் வாழ்க்கை தத்துவம் குறித்தும் பேசியுள்ள அவர், யாருடைய கட்டுப்பாட்டிலும் வாழ விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். தனக்குப்பிடித்த ஆடைகளை அணிவது, நேரம் கிடைக்கும்போது நடனமாடுவது, எழுதுவது, வாசிப்பது என சுதந்திரமான வாழ்க்கையே தனக்குத் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தவிதமான போதைப்பொருட்களையும் சாராமல், தன்னைத்தானே மதித்து வாழ்வதே தன் இலக்கு என்றும், மற்றவர்கள் தன்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாழவில்லை என்றும் அவர் அழகாக விளக்கியுள்ளார்.
கோடி கோடியாகப் பணமும் சொகுசான கார்களும் காட்டப்பட்டாலும், தன் மானமும் சுதந்திரமுமே எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்றது என்பதை நடிகை பிரதீபா தன் செயல் மூலம் நிரூபித்துள்ளார். சமுதாயத்தின் நியாயமற்ற விதிகளுக்குப் பயந்து வாழாமல், தனக்குப் பிடித்த வாழ்க்கையைத் தைரியமாகத் தேர்ந்தெடுத்து வாழும் பிரதீபாவின் இந்த அதிரடிப் பதிவு, பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
