பஞ்சாப் மாநிலம் ராஜ்புரா அருகே அம்ரித்சர் – ஜல்பைகுரி கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலின் (வண்டி எண்: 12508) நான்கு பொதுப் பெட்டிகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சராய் பஞ்சாரா – பசந்த்புரா இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, எஞ்சினுக்கு அடுத்து இருந்த முதல் பொதுப் பெட்டியின் மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவே (Short Circuit) இந்த விபத்திற்குக் காரணம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகை வேகமாகப் பரவியதைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் அடுத்தடுத்த பெட்டிகளுக்கு நகர்ந்து உடனடியாகத் தப்பினர். அதிர்ஷ்டவசமாக இந்த அசம்பாவிதத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. இருப்பினும், தீ கடுமையாகப் பரவியதால் 3 பெட்டிகள் முழுமையாகவும், 4-வது பெட்டி பகுதியாகவும் சேதமடைந்ததை அடுத்து அவை ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்டன. புகையால் மூச்சுத்திணறல் மற்றும் அவசர ஜன்னல் வழியே குதித்ததில் லேசான காயமடைந்த 15 பயணிகள் ராஜ்புரா மற்றும் ஃபதேகர் சாஹிப் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாலா கோட்ட மேலாளர் வினோத் குமார் பாட்டியா நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட நிலையில், பயணிகள் அனைவரும் மாற்று ரயில் மூலம் தங்களது பயணங்களைத் தொடர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
