திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாக்களில் நடிகர் தனுஷின் பேச்சு எப்போதுமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் விழாவில் தனுஷ் பேசிய வார்த்தைகள், அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தன.
தனக்கு எதிரான விமர்சனங்கள் குறித்தும், தன்னை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக எழும் புகார்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் தனுஷ் மேடையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். “நம்ம என்ன பேசினாலும் ஏதாச்சும் சொல்லத்தான் போறாங்க. அதற்காக பேசாம இருக்க முடியாது; ஏதாச்சும் பேசி தான் ஆகணும். ஒன்று புதுசா உருவாகிறது என்றால் அங்கு ஒரு அதிர்வு இருக்கத்தான் செய்யும். இவரை யாரோ இயக்குறாங்க, பின்னால் யாரோ இருக்காங்க என்று பல பேச்சுக்கள் வருகின்றன. ஆனால் என்னை இயக்குவது இறைவன் மட்டுமே! என் பின்னால் இருப்பது ரசிகர்கள், என் பக்கம் நிற்பது மக்கள். மற்றபடி வேறு யாரும் இல்லை” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து தன் ரசிகர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திய தனுஷ், “எண்ணம் போல் வாழ்க்கை என்பது தான் எனது கோட்பாடு. ஒரு தம்பி கூறியது போல மற்றவர்களுக்கு இதயம் ‘லப்டப்’ என்று துடிக்கும், ஆனால் எனக்கு ‘பேன்ஸ்.. பேன்ஸ்..’ என்றுதான் துடிக்கும். நீங்கள்தான் என் வாழ்க்கை” எனக் கூறியபோது அரங்கம் முழுவதும் ரசிகர்களின் கைத்தட்டல்களாலும் விசில்களாலும் அதிர்ந்தது. திரைத் துறையில் தனக்கு ஆதரவாக இருக்கும் மக்கள் கூட்டமே தனது மிகப்பெரிய பலம் என்பதை அவர் இதன் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
திரையுலகில் 24 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தொகுப்பாளர் கேட்ட “அடுத்த ஆரம்பம் என்ன?” என்ற கேள்விக்கு தனுஷ் சுவாரசியமான பதிலளித்தார். “எனது அடுத்த ஆரம்பம் தமிழரசன் பச்சைமுத்துவின் இயக்கத்தில் உருவாகும் படம் தான். தற்போது அந்த இயக்குநரை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன்; இன்னும் ஒரு வார படப்பிடிப்பிற்கு பின் முழுமையாக புரிந்து கொள்வேன். அது ரசிகர்களுக்கான ஒரு முழுமையான ‘ஃபேன் பாய்’ சம்பவமாக அமையும். அதேபோல் ‘ஓம்’ திரைப்படத்திலும் நீங்கள் எதிர்பார்க்கும் சுவாரசியங்கள் நிறையவே இருக்கும்” என்று கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார்.
