ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் விலைவாசி உயர்வு, சிறைக்கைதிகள் தப்பியோட்டம் போன்ற தீவிரமான சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றம் செய்யவே தவெக இவ்வாறு பேசுவதாக அவர் குற்றம் சாட்டினார். TVK ஆட்சியை கவிழ்க்க அதிமுகவும், பாஜகவும் சதி செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற சுத்தப் பொய் என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும், தங்களின் நிர்வாக குளறுபடிகளை மறைக்க எத்தனை போலி புகார்களை அடுக்கினாலும், அழுது புலம்பினாலும் மக்களின் கேள்விகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் நயினார் விமர்சித்துள்ளார். அரசு தன் சொந்தத் தவறுகளை உணர்ந்து மக்களுக்குப் பதிலளிக்க வேண்டுமே தவிர, அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் மீது சதித் திட்டம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தினார். ஆட்சியாளர்களின் இத்தகைய போலித்தனமான அணுகுமுறையை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
