ரூ.70 கோடி பேரம்… ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக…. தவெக ஆட்சியை கவிழ்க்க மெகா பிளான்?…. குதிரை பேரத்தில் சிக்கிய தமிழக அரசியல்….!

By Nanthini on கார்த்திகை 6, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத ‘குதிரை பேரம்’ என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச் செய்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்களிலேயே, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதிதாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தபோது, “தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது” என திமுக மற்றும் அதிமுக ஆகியவை காட்டமாக குற்றஞ்சாட்டின. ஆனால், தற்போது அந்த குற்றச்சாட்டு தலைகீழாக மாறியுள்ளது. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தோடு, தவெக எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக பேரம் பேசியதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் எம்.எல்.ஏ முஸ்தபா ஆகியோர் புயலைக் கிளப்பும் தகவலை வெளியிட்டுள்ளனர். பரஸ்பரம் முன்வைக்கப்படும் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிர்வலையை உருவாக்கியுள்ளன.

முன்பெல்லாம் ஆளுநர் மாளிகை அரசியல், எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்டுகளில் அடைத்து வைப்பது மற்றும் கோடிக்கணக்கில் பணம் கைமாறுவது போன்ற ‘குதிரை பேர’ சம்பவங்கள் வடமாநில அரசியலின் அடையாளமாகவே பார்க்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் கொள்கை சார்ந்தும், கட்சித் தலைமைகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் தான் அரசியல் நகர்வுகள் இருந்தன. ஆனால், தவெகவின் வருகை மற்றும் தற்போதைய ஆட்சி அதிகாரப் போட்டிகளுக்கு இடையே, வடமாநில பாணி குதிரை பேரக் கலாச்சாரம் தமிழகத்திலும் கால்பதித்துவிட்டதோ என்ற ஐயத்தை எழச் செய்துள்ளது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு சவாலாக உருவெடுத்துள்ள இந்த ‘பேர அரசியல்’, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அரசியல் ஆய்வாளர்களிடையே கடுமையான விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.