குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன் மூலம், 3 பேருக்குப் புதிய வாழ்க்கை கிடைத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காந்திநகர் மாவட்டம் தேகாம் பகுதியைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த தலைக் காயமடைந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், நவம்பர் 3-ஆம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் முறைப்படி அறிவித்தனர்.
இந்தச் சோகமான சூழலில், மருத்துவமனையின் ஆலோசனைக் குழுவினர் அவரது மனைவியிடம் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைக் எடுத்துரைத்தனர். கணவனை இழந்த ஆறாத் துயரத்திலும் துணிச்சலாகச் செயல்பட்ட அந்தப் பெண், உறுப்பு தானத்திற்கு எழுத்துப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து மீட்கப்பட்ட 1 கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் உடனடியாக அகமதாபாத் சிவில் மெடிசிட்டி வளாகத்தில் உள்ள சிறுநீரக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 3 நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. துயரமான நேரத்திலும் பிறருக்கு ஒளியேற்றிய அந்த குடும்பத்தினரின் தியாகத்தைப் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
